முதல்வருக்கு அப்பாவி முஸ்லிம்கள் சார்பில் வேண்டுகோள்!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகத்தில் முஸ்லிம்களின் வீடுகளில் அடாவடி - சட்டவிரோத என். ஐ. ஏ. சோதனை சம்பந்தமாக மதுரை வழக்கறிஞர் எம். எம். அப்பாஸ் எழுதிய கடிதம் வருமாறு : கடந்த 22.09.22 அன்று ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் கைப்பாவையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் சிலரின் வீடுகளில் சட்டவிரோத சோதனை நடத்தி அப்பாவிகளை கைது செய்து கொண்டு சென்றதை தாங்கள் நன்கு அறிவீர்கள். முஸ்லிம் சமூகத்தின் மீதும், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளங்களின் மீதும் தீராத மத வெறுப்பு கொண்டதுதான் மத்திய பாரதிய ஜனதா அரசு என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள். இந்தப் பின்னணியில்தான் முஸ்லிம் சமூகத்தால் நடத்தப்படும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது பாரதிய ஜனதா அரசும் அதன் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையான என் ஐ ஏ வும் வெறுப்பு கொண்டுள்ளதும் தாங்கள் அறிந்ததே. இவ்வெறுப்பை தணிக்க பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி அதன் நிர்வாகிகளை கைது செய்ய நடத்தப்பட்டது தான் கடந்த 22.09.2022 அன்று நடைபெற்ற சோதனை என்பதை தாங்கள் அறிந்திராமல் இருக்க வாய்ப்பில்லை என்று நம்புகின்றேன். மதுரையில் அப்பாவிகளின் வீடுகளில் நடைபெற்ற தேசிய புலனாய்வு முகமையின் சட்டவிரோத சோதனையை களத்தில் நின்று ஒரு வழக்கறிஞராக அதிகாலை 3 மணியிலிருந்தே நேரடியாக பார்த்தவன் என்ற அடிப்படையில் இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன். சோதனை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமைக்கு முழுக்க முழுக்க அரணாக நின்று ஒத்துழைப்பு கொடுத்தது தமிழக காவல்துறை தான் என்பது யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு உதவி ஆணையாளர், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்ட தமிழக காவல் துறையினர் நின்று கொண்டு அப்பாவி முஸ்லிம்கள் அவர்களின் வழக்கறிஞர்களை கூட சோதனை நடக்கும் வீட்டிற்குள் அனுமதிக்க விடாமல் தங்களது லத்திகளையும், துப்பாக்கிகளையும் வைத்து மிரட்டி தேசிய புலனாய்வு முகமைக்கு தங்களது விசுவாசத்தை சிறப்பாக காட்டினார்கள். வந்திருக்கும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆர் எஸ் எஸ், பிஜேபியின் உத்தரவுக்கு இணங்க இச்சோதனையில் ஈடுபட்டுள்ளதையும்,இவர்கள் பொய்யாக தாங்கள் கொண்டு வந்த பொருட்களை உள்ளே வைத்து எடுத்து பொய்வழக்கு ஜோடிப்பார்கள் என்று எவ்வளவோ சொல்லியும் நான் உள்பட எந்த ஒரு வழக்கறிஞரும் சோதனை நடைபெறும் வீட்டிற்குள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு தமிழக காவல்துறையினர் எங்களை மிரட்டி தடுத்து என் ஐ ஏ வுக்கு சேவை செய்தனர். இவை அனைத்தும் போகிறபோக்கில் தங்களிடம் சொல்லிவிட்டு போகும் செய்தி அல்ல, அனைத்திற்கும் உரிய வீடியோ ஆதாரம் எங்களிடம் இருக்கவே செய்கின்றது. தாங்கள் கேட்கும் பட்சத்தில் அதனை தங்களிடம் சமர்ப்பிக்கவும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். வெறும் பத்துக்குப் பத்து அறையில் மதுரையில் தங்களது வாழ்நாளை கழித்து வரும் அப்பாவி ஏழை முஸ்லிம்களின் வீடுகளில் 5 மணி நேரமாக சோதனை செய்ய என்ன இருக்கின்றது?இவர்கள் போலியாக ஆவணங்களையும்,ஆதாரங்களையும் உருவாக்குகிறார்கள் என்று நாங்கள் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் தமிழக காவல்துறை எங்களை எந்த ஒரு சோதனை செய்யும் வீட்டிற்குள்ளும் அனுமதிக்காமல் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் தாங்கள் நினைத்ததை பொய்யாக ஜோடிக்கும் வரை அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக நின்று பார்த்துக் கொண்டனர். எதிர்பார்த்தது போலவே மதுரை கோரிப்பாளையத்தில் குடியிருக்கும் ஏழை சகோதரி நஜ்மா பேகம் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ஒருவர் தனது கையில் கொண்டு வந்த பை ஒன்று முழுக்க பணம் இருந்துள்ளது. வெளியிலிருந்து கொண்டு வருவதை பார்த்து சுதாரித்த சகோதரி நஜ்மா பேகம் அவர்கள் இந்தப் பை வெளியிலிருந்து கொண்டு வருகிறீர்கள் இதற்குள் என்ன இருக்கிறது திறந்து காட்டுங்கள் என்று உறுதியாக கூறவே திறக்கப்பட்ட அப்பை நிறைய பணம் கொண்டு வரப்பட்டுள்ளது. எதற்காக இந்த பணம் என்று கேட்டதற்கு இல்லை இது எங்கள் உபயோகத்திற்காக கொண்டு வந்துள்ளோம் என்று என் ஐ ஏ அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் அச் சகோதரி தீர்க்கமாக அப்பையை உள்ளே அனுமதிக்காமல் இருந்ததால் அப்பை அங்கே இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டில் நிற்க முடியாத அளவிற்கு கூட்டமாக பல அதிகாரிகள் திமு திமுவென நுழைந்ததால் யார் யார் என்ன கொண்டு வந்தார்கள் அதை எங்கெங்கே வைத்து எப்படி எடுத்தார்கள், வழக்கை எப்படி பொய்யாக ஜோடி த்தார்கள் என்பதை அந்த அப்பாவி முஸ்லிம்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இதில் மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி என்னவென்றால் வந்திருந்த அதிகாரிகளுக்கு தமிழ் தெரியவில்லை என்பதால் அவர்கள் சொல்லும் இடங்களில் எல்லாம் கையெழுத்து போடச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களை வற்புறுத்தியுள்ளதும் தமிழக காவல்துறையே. அப்படி கையெழுத்துப் போடவில்லை என்றால் உங்களை சிறையில் அடைத்து விடுவார்கள் நீங்கள் வெளியவே வரமுடியாது என்றும் மிரட்டி பல இடங்களில் கையெழுத்தும் பெற்றுக் கொடுத்துள்ளனர் தமிழக காவல்துறையினர்! இவை அனைத்தும் சோதனை நடைபெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட அரசின் வீடியோ பதிவேட்டில் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தாங்கள் அதை கைப்பற்றி ஆய்வு செய்தால் தமிழக காவல்துறையின் சில அதிகாரிகளின் சட்டவிரோத செயலும், என் ஐ ஏ விசுவாசமும் தங்களுக்கு விளங்கும் என்று நம்புகின்றேன். மேலும் இந்த மத விரோத சோதனையை கண்காணிக்க வந்த வழக்கறிஞர்களையும், அப்பகுதி பொதுமக்களையும் வீடியோ எடுத்து மிரட்டியும், இவர்களை கல்லால் எறிந்து விரட்ட வேண்டும் என்று கூறியும் அச்சுறுத்தியது வேறு யாருமில்லை தங்களது திராவிட மாடல் ஆட்சியின் கீழ் உள்ள சில தமிழக காவல்துறையினர் தான் என்பதை தங்களின் பார்வைக்கு கொண்டுவர விரும்புகின்றேன். மேலும் இவர்கள் தேடிச்சென்ற எந்த ஒரு அப்பாவி முஸ்லிமும் தலைமறைவாக இருக்கவில்லை, அவரவர்கள் அவரவர்களது வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொழுது இரவு நடுநிசி 2 மணிக்கே வீடுகளின் கதவுகள் உடைக்கப்படும் அளவுக்கு துப்பாக்கிகளாலும்,லத்திகளாலும் குத்தி கதவுகள் தட்டப்பட்டுள்ளது. இந்தக் கொடூரச் செயலையும் என் ஐ ஏ வுக்காக அரங்கேற்றி கொடுத்தது தமிழக காவல்துறையே! மேலும் குழந்தைகளுக்கு பால் கூட கொடுக்க விடாமலும், வலிப்பு நோய் வந்த சகோதரி நஜ்மா பேகத்தின் தாயாருக்கு மருத்துவ உதவி கூட செய்ய விடாமலும் இன்னும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள முதியவர்களுக்கு பல்வேறு துன்பங்களையும்,துயரங்களையும் கொடுத்து பல்வேறு மனித உரிமை மீறல்களில் தமிழக காவல்துறையின் சில அதிகாரிகள் ஈடுபட்டதை எழுதினால் ஏடு கொள்ளாது என்பதையும் தங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். சோதனை நடத்திய இடங்களில் பணிக்கு வந்த தமிழக காவல்துறையினர் முஸ்லிம் சமூகத்தின் மீது இத்துணை மததுதேசமாகவும், மத வெறுப்புடனும் செயல்பட வேண்டிய காரணம் என்ன என்பதை காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள தாங்கள்தான் இதனை முஸ்லீம் சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். எந்த தவறும் செய்யாத அப்பாவியான அரசியல் மட்டுமே செய்த தங்களது தந்தை மு.கருணாநிதி அவர்களும் தங்களது மைத்துனர் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களும் கடந்த 30.06.2001 அன்று இரவு தங்களது வீடுகளில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அம்மையார் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான தமிழக காவல்துறை எப்படி கோபாலபுரம் இல்லத்தில் அத்துமீறி நுழைந்து தடாலடியாக தங்களது தந்தையாரையும், மைத்துனரையும் நடுநிசியில் தூக்கிச் சென்றார்களோ அதே போன்றுதான் இந்த அப்பாவி முஸ்லிம்களையும் பிஜேபிக்கு எதிராக அரசியல் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக என் ஐ ஏ போலீசார் சட்டவிரோதமாக தூக்கி சென்றனர். தற்போது இதற்கு முழு உடந்தையாக இருந்தது தங்களது கட்டுப்பாட்டிலுள்ள தமிழக காவல்துறையே! எப்படி தங்களது குடும்பத்தார்கள் கைது செய்யப்படும் பொழுது தாங்கள் கலங்கி நின்றீர்களோ அதேபோன்று இந்த அப்பாவி முஸ்லிம்களின் கைதால் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம் சமூகமும் கலங்கி நிற்கின்றது. நெஞ்சில் வஞ்சம் வைத்து விட்டாள் எப்படியெல்லாம் பொய் வழக்குப் போடுவார்கள், எப்படியெல்லாம் போலியாக ஆதாரங்களைத் திரட்டுவார்கள் என்பதை தாங்களும் தங்கள் குடும்பமும் அறிந்திராத விஷயம் அல்ல. தங்களது கட்சி ஆட்சிக்கு வரவேண்டும், நீதி நிலை பெறவேண்டும், மதச்சார்பின்மை நாட்டிலே பாதுகாக்கப்பட வேண்டும், சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் போன்ற உயரிய காரணங்களுக்காக 90 சதவீத முஸ்லிம்கள் தங்களுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக சொல்லப்படும் தமிழக காவல்துறையினர் மேலே சொல்லப்பட்டுள்ள சோதனைகளின் போது முழுக்க முழுக்க முஸ்லிம் விரோதப் போக்குடன் செயல்பட்டுள்ளது ஆதாரத்துடன் இந்நிகழ்வில் வெளிப்பட்டுள்ளது. எங்களுக்கு ஆதரவாக செயல்படுங்கள் என்று முஸ்லீம்கள் எக்காலத்திலும் தங்களிடம் கேட்டதில்லை, மாறாக நீதியுடனும் நியாயத்துடனும் செயல்படுங்கள் என்பதே எப்போதும் முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கையாக இருந்துள்ளது என்பதை தாங்கள் அறிந்திராமல் இல்லை. அதனால் இக் கடிதம் கண்டவுடன் தாங்கள் உறுதியான நடவடிக்கை எடுத்து நீதி நிலைபெற!அப்பாவிகள் விடுதலை பெற!தவறிழைத்த காவல்துறையினர் தண்டனை பெற!தாங்கள் உடனடியாக வழிவகை செய்வீர்கள் என்று உறுதியுடன் நம்புகிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!