இந்தி திணிப்பும் தாய் மொழிகள் அழிப்பும் அனுமதிக்கலாகாது!
* இந்தியாவிலேயே முதன் முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீகாரின் நிலையைப் பாருங்களேன்!
ஆனால் பீகாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி.
* உத்தரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான்!
அதன் முன்னேற்றத்தையும் ஆய்வு செய்து கொள்ளுங்கள்!
ஆனால் வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்ட்!
* வடகிழக்கு உ.பி.யின் தாய்மொழி போஜ்புரி, பிரதாப்கர்!
மத்திய உ.பி.யில் பேசப்படுவது ஆவ்தி, பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப் படுகிறது.
* அடுத்ததாக உத்தரகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான் போதாதற்கு சமஸ்கிருதம் கூடுதல் அலுவலக மொழி.
ஆனால் உத்தரகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி!
* அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான்.
ஆனால் தாய்மொழி ஹரியான்வி!
* ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி!
ஆனால் தாய்மொழிகள் ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி!
* மத்திய பிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி!
ஆனால் தாய் மொழிகள் உருது, மால்வி, நிமதி, அவதி,
பகேலி!
* காஷ்மீரின் தாய்மொழி கஷ்மீரி மற்றும் உருது!
ஜம்முவின் தாய்மொழி டோக்ரி, பாடி!
லடாக்கின் மொழி லடாக்கி, ஆட்சி மொழியாக இந்தி சமீபத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது!
* சட்டீஸ்கரில் தாய்மொழி சட்டீஸ்கரி, கோர்பா, ஆனால் ஆட்சிமொழியாக ஹிந்தி!
* ஜார்கண்டில் தாய்மொழி ஜார்கன்ஷி, சந்த்தலி!
ஆட்சிமொழி இந்தி!
மேற்கூறிய மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்புகளோ வருவதில்லை!
வரி வடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை மாறி, சுருங்கிவிட்டன.
இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய் மொழிகள் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன!
ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகி விட்டது.
அவர்கள் தாய்மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி வெறும் வாய்மொழி ஆகிப்போயின. கல்விநிலையங்களில் கற்பிக்கப்படுவதில்லை.
சரி - மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டதால் பொருளாதார வளர்ச்சி கிடைத்துவிட்டதா என்றால் இல்லை.
தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தைவிட பின்தங்கியே உள்ளன.
சரி- கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன!
பிறகெதற்கு நம்மீது மும்மொழிக் கொள்கை என்று இந்தியைத் திணிக்கிறார்கள் என்றால் இந்தி பேசும் மாநிலத்தினருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவதும், தொழில் மேற்கொள்வதும் ஏன் தேர்தல் பிரச்சாரம் செய்வதும்கூட எளிமையாக இருக்க வேண்டுமல்லவா?
"நான் உன்னோடு தொடர்பு கொள்ள எனக்குச் சிரமமாக இருக்கிறது. அதனால் நீ என் மொழியைக் கற்றுக்கொள்" என்பது எவ்வளவு திமிரான அடக்குமுறை!
அந்த அடக்குமுறைதான் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது; புதிய கல்விக் கொள்கை வாயிலாக!
* -பகீரதன்,
பட்டுக்கோட்டை.

Comments
Post a Comment