புதுக்கோட்டையில் அரேபிய தங்க நாணயம்! - ஒரு வரலாற்றுப் பார்வை
( புதுக்கோட்டையில் அரேபிய தங்க நாணயம்! என்ற செய்தி குறித்து வரலாற்று ஆய்வாளர் ஜெ. ராஜா முஹம்மது
எழுதியுள்ள கட்டுரை )
******
2022 மே மாதம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகில் உள்ள ஏனாதி கிராமத்தில் 16 தங்க நாணயங்கள் புதையலாகக் கிடைத்தன.
இந்த நாணயங்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் சில:
1) 2020 ஜுன் மாதத்தில் சிவகங்கை மாவட்டம் இலந்தக்கரையில் ஒரு தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இந்த நாணயம் குறித்த செய்தி கிடைத்தவுடன் சென்னை பல்கலைக்கழக அரபுத்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுடன் தொடர்பு கொண்டு சில சரியான செய்திகளை உறுதி செய்து கொண்டேன்.
2) தற்போது ஏனாதியில் கிடைத்திருப்பதும் இதே வகை காசுகள்தான். ஏனாதி, இலந்தக்கரை ஆகிய ஊர்கள் சற்று அருகருகே உள்ள ஊர்கள்தாம். மேலும் ஏனாதி தொன்மை வரலாற்றுச் சான்றுகள் கொண்ட இடமாகும்.
3) ஏனாதியில் நாணயங்கள் கிடைத்தவுடன் இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் என்னிடமும் தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர். வரலாற்றுத் தகவல்களைச் சொன்னேன். ஆனால் சமூக வலைதளக்காரர்கள், ஊடகவியலார் ஆகியோர் பல ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர். சில நண்பர்கள் நான் இது குறித்து எழுத வேண்டுமெனவும் பதிவிட்டனர். எனவே இந்த பதிவு.
4) ஏனாதியில் கிடைத்தத் தங்க நாணயங்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இன்றைய சிரியாவின் தலைநகராக விளங்கும் டமாஸ்கஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த உமையா கலீபாக்களின் ஆட்சி காலத்தில் ஹிஜிரி முதல் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது ஆகும். நாணயத்திற்கு தினார் என்று பெயர்.
5) ஏனாதியில் கிடைத்த 16 நாணயங்களுள் மிகத் தெளிவாக உள்ள நாணயம் ஓரிரண்டு மட்டுமே. மற்றவை, குறுக்காக வெட்டப்பட்டும், துளைகள் இடப்பட்டும் சிதைக்கப்பட்டும் காணப்படுகின்றன.
இந்த நாணயத்தின் முன்பக்கம் நடுப்பகுதியில் “லா இலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்கலஹு” (அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஒருவனே. அவனுக்கு இணை இல்லை) என தொன்மையான அரபி எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
இதே பக்கத்தில் நாணயத்தின் ஓரப்பகுதி முழுவதும் வட்டமாக “முஹம்மதுர் ரசூலுல்லாஹ் அர்ஸலஹு பில்............தீனி குல்லிஹி” (முஹம்மது அல்லாஹ்வின் தூதர், அவன் அவரை நேரான வழி மற்றும் சத்தியமார்க்கத்தைக் கொண்டு அனுப்பிவைத்தான். எல்லா மார்க்கங்களையும் வென்று வரும்படி செய்தான்) என்று பொறிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நாணயத்தின் மறு பக்கம் நடுப்பகுதியில், ‘அல்லாஹு அஹத், வல்லாஹுஸ் ஸமத், லம்யலித், வலம் யூலத்’ ( இறைவன் ஒருவனே, இறைவன் தேவையற்றவன். அவன் எவரையும் பெறவுமில்லை, எவராலும் பெற்றெடுக்கபடவுமில்லை) என முன்பக்கம் போன்றே அரபியில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பக்கத்தில் ஓரத்தில் வட்டமாக “பிஸ்மில்லாஹ் ழுரிப ஹாதத் தீனார் ஃபீஸனத்தி – வஸமானின்” (இறைவன் பெயரால் இந்த தீனார் ஹிஜிரி எண்பத்தி ஏழாம் ஆண்டு அச்சிடப்பட்டது)” என முன்சொன்ன பாணியிலேயே அரபியில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயங்கள் ஏற்கனவே பல இடங்களில் கிடைத்துள்ள உமையாக்கள் காலத்து நாணயங்களை பெரிதும் ஒத்திருக்கின்றன. ஆகவே இவை உமயாக்கள் ஆட்சி கால 7ஆம் நூற்றாண்டு நாணயங்களாகும்.
சரி, வரலாறு சொல்வதென்ன?
6) பெருமானார் நபிகளார் (ஸல் ) மூலமாக உலகிற்கு இஸ்லாம் பெருவழக்கிற்கு அருளப்பட்ட கி.பி.7ஆம் நூற்றாண்டுக்கு முன்பே - சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அரேபிய நாடுகளுக்கும் தமிழகத்திற்கும் வணிகத்தொடர்பு இருந்ததை சங்ககாலத் தமிழ் இலக்கியங்கள் சொல்லுகின்றன. குதிரைகள், பொன், மணிகளை ஏற்றிவந்து இங்கிருந்து மிளகு போன்ற வாசனைப் பொருட்களை வாங்கிச் சென்றதை இப்பாடல்கள் தெரிவிக்கின்றன.
இத்தொடர்பின் தொடர்ச்சியாக கி.பி.7ஆம் நூற்றாண்டிலிருந்து இங்கு வந்த அரேபியர் ‘முஸ்லிம்களாக’ வந்து, இங்கேயே தங்கிய சிலர் நமது நாட்டு பெண்களைத் திருமணம் செய்து கொண்டதன் வாயிலாக தமிழக இஸ்லாமிய சமுதாயம் தொடக்கம் கண்டு, காலப் போக்கில், நமது நாட்டு மக்கள் கூட்டமாக இஸ்லாம் மதத்தைத் தழுவியதால், இங்கு இஸ்லாமியக் குடியிருப்புகள் தோன்றலானது என்பதும், திருச்சிராப்பள்ளி உறையூரில் ஹிஜ்ரி 116இல் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்தது என்பதும் வரலாறு.
ஆகவே, ஹிஜிரி முதல்-இரண்டாவது நூற்றாண்டுகளிலேயே இஸ்லாம் தமிழகத்தில் வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதும் வரலாறு.
8) மலபார் என்னும் மேற்குக் கடற்கரை துறைமுகங்களுக்கும் தமிழ்நாட்டு கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களுக்குமிடையே தரைவழிப் போக்குவரத்து இருந்துவந்தது. இந்த பெருவழி புதுக்கோட்டைப் பகுதி வழியாகவே சென்றது. மேலும் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்த வணிகர்கள் புதுக்கோட்டைப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ஆகவே, அவர்களுக்கு அரேபிய வணிகர்களுடனான வணிகத்தொடர்பு இருந்திருக்கக்கூடும்.
அப்போதெல்லாம் வணிகம் பண்டமாற்று முறையிலேயே நடைபெற்றது. எனவே இதுபோன்ற தங்க நாணயங்கள் பண்டமாற்றாக பெறப்பட்டிருக்கலாம். (புதுக்கோட்டைப் பகுதி வணிகர்கள் கி.பி.முதல்-இரண்டாம் நூற்றாண்டில் ரோமநாட்டு வணிகர்களுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர். இதற்கு சான்றாக புதுக்கோட்டை ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காகுறிச்சியில் 500 ரோம் பொன் நாணயங்கள் புதையலாகக் கிடைத்துள்ளது என்பதும் கூடுதல் செய்தி).
9) இலந்தக்கரை மற்றும் ஏனாதியில் கிடைத்த நாணயங்கள் செலாவணியிலிருந்து திரும்பப்பெறப்பட்டவை. அக்காலத்தில் நாணயங்கள் செலாவணியிலிருந்து திரும்பப் பெறப்படும்போது அவை குறுக்காக வெட்டப்பட்டும், துளையிடப்பட்டும், உரு சிதைக்கப்பட்டும் தங்கத்தின் மதிப்பிற்காக இருப்பில் வைக்கப்படும். தங்கம், என்றும் தங்கம்தான்! அதன் மதிப்பு என்றும் குறைவதில்லை. இப்படிப்பட்ட நாணயங்கள், தங்கத்தின் மதிப்பிற்காக பண்டமாற்றுப் பொருளாக பரிவர்த்தனையில் இருந்தது என்பது நாணயவியல் வரலாறு.
10) எனவே இங்கு நாம் கருத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால் இதுபோன்ற பரிவர்த்தனைக்கு அரேபிய முஸ்லிம் வணிகர்களோ அல்லது இவ்விடத்தில் முஸ்லிம்கள்தான் முற்றிலும் காரணம் என்று சொல்லிவிடுவதற்கில்லை.
11) அரேபிய-தமிழக பண்டைய வணிகம், ஹிஜிரி தொடக்க ஆண்டுகளில் தமிழகத்தில் இஸ்லாத்தின் பரவல் ( தொடக்கக்காலத்தில் இஸ்லாம் மத பரவல் மிகவும் சீராக இருந்தது காணத்தக்கது) இங்கு இஸ்லாம் மதத்தைத் தழுவியவர்களின் வரலாறு அவர்களது வணிகம் என ஒவ்வொன்றும் அதனதன் சான்று அடிப்படையில் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டியவையாகும். நாணயங்களைக் கொண்டு மட்டுமே ஒரு முடிவுக்குவர இயலாது. இஸ்லாம் இங்கு வாள் கொண்டும் பரப்பப்படவில்லை. ஏனெனில் இங்கு அப்போது முஸ்லிம் மன்னர்கள் யாரும் ஆட்சி செய்யவில்லை.
12) அரேபிய நாணயங்கள் கிடைத்த இடங்களில் அரேபிய நாணயங்கள் மூலம் அதன் மதிப்பு பண்டமாற்று வணிகம் கொண்டு நடைபெற்றிருக்கக்கூடும். இங்கெல்லாம் அரேபியர் முஸ்லிம் வணிகர்கள் வந்தார்களா, நமது நாட்டு முஸ்லிம் வணிகர்கள் அங்கெல்லாம் இருந்தார்களா அல்லது இவ்வூர்களிளெல்லாம் இஸ்லாம் பரவி இருந்ததா என்பது போன்ற வரலாறு அசல் / முதல்நிலை / வழக்காறு சான்றுகள் கொண்டு நிலைநிறுத்தப்பட வேண்டும்.
எவ்வாராயினும், பொதுவாக 2000 ஆண்டுகளுக்கு முன்பே அரேபிய-தமிழக வணிகத்தொடர்பு இருந்தது என்பதும், ஹிஜிரி தொடக்க ஆண்டுகளிலேயே இங்கு இஸ்லாம் வந்துவிட்டது என்பதும் வரலாறு காட்டும் உண்மை. இந்த நாணயங்களும் வணிகத்தொடர்பிற்கான ஒரு துணைச் சான்றாகும் எனக் கொள்ளலாம்.
தமிழகத்தில் இஸ்லாம் குறித்து சான்றாதாரங்களுடன் கூடிய வரலாறு எழுதும் பணி முனைப்புடன் நடைபெற்று வருகிறது.
** - டாக்டர் ஜெ.ராஜா முஹம்மது,
வரலாற்று ஆய்வாளர்.
இயக்குநர்,
இஸ்லாமிய தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மையம்,
ஜமால் முஹம்மது கல்லூரி (தன்னாட்சி)
திருச்சி.




Comments
Post a Comment