குனி மனிதரைக் கூன் நிமிர்த்தியவர்!
* கூடாது கூடாது கூடாது
கூடாதென்று
பாடாய்ப் படுத்திப்
பாழ்படுத்தினர்! சமூகத்தை
கேடுகள் கிழித்தெறியக்
கிளர்ந்தது ஒரு சிங்கம்!
* கூடாது கூடாதென்று
கூடாரை வென்ற பெருஞ்சித்தர்
நம் பெரியார்!
* காலணியக் கூடாது -
மேலணியக் கூடாது -
நூலணியக் கூடாது -
கையவிழக் கூடாது -
மெய் நிமிரக் கூடாது -
நீர் அருந்தக் கூடாது -
நேர் வருதல் கூடாது -
நூல் படிக்கக் கூடாது -
மேலுயரக் கூடாது -
கிட்ட வரக் கூடாது -
தொட்டுவிடக் கூடாது -
பட்டுவிடக் கூடாது -
வேலை பெறக் கூடாது -
கோவில் வரக் கூடாது -
துண்டு தோளேறக் கூடாது -
பெண்டிர் முன்னேறக் கூடாது -
விதவையர்
பூச்சூடக் கூடாது -
பொட்டு வைக்கக் கூடாது -
மறுமணங்கள் கூடாது -
புதுவாழ்வு கூடாது என
கூடாதுகளால் வாழ்வு
கூடாதிருந்தது...
* கனியை விலக்கிற்று ஒரு வேதம் -
மனிதரையே விலக்கிற்று இம்மண் பேதம் -
வைக்கத்தில் பெரியார்
வைத்தார் பாதம் -
மிதிபட்டது அம்மண் மட்டுமன்று -
அம்மண்ணின் அடிமைத்தனமும்!
* வந்ததைக் கண்டனர் -
வென்றதைக் கேட்டனர் -
இதிகாச ராமசாமி
பாதம் பட்டு
ஓர் அகலிகை மட்டுமே உய்ந்தாள்!
புதுசகாப்த ராமசாமி
பாதம் பட்டு
உய்ந்தனர் பல்லாயிரத்தோர்!
* பரியை நரியாக்கி
நரியைப் பரியாக்கி
கல்லைக் கனியாக்கி
மண்ணைப் பொன்னாக்கி
எலும்பைப் பெண்ணாக்கி
செத்தாரை எழுப்பி
ஆடுவன அல்ல சித்து!
* மனிதரை மனிதராக்குதலே
மாபெரும் சித்து!
* குனிமனிதர் கூன் நிமிர்த்தி
குருட்டு மனிதர் கண்திறந்து
செவிட்டு மனிதரைச்
செவிமடுக்கச் செய்து
அடங்கி முடங்கியோரை
நடைபயிலச் செய்து
சீர்கெடச் செத்தாரை எழுப்பிச்
சீர்வாழ்வு தந்த சித்தர் பெரியார்!
* சேராது தடுக்கச் செய் சூட்சிகளைச்
சோராது முறியடித்த சூரர் அவர்!
* ஆகாதன ஆக்கி
போகாதன போக்கிக்
கூடாதன கூடச் செய்து
கூடாதெனத் தடுத்த
கூடாரை வென்ற
வேந்தர் பெரியார்!
** - அனுப்பியவர்: எம்.கே. ஜமால் முஹம்மது.

Comments
Post a Comment