போற்றத்தக்க மொரோக்கோ வீரர்களின் பண்பு!

கொண்ட கொள்கையில் வளைந்து கொடுக்காத வளைகுடா நாடு கத்தர்! அங்கு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் மொராக்கோ முஸ்லிம் வீரர்கள் உலகுக்கே ஒரு பெரும் பண்பையும் போற்றத்தக்க நாகரீகத்தையும் கற்றுத்தந்தனர். போட்டியில் வெற்றி பெறும்போதெல்லாம் தங்கள் பெற்றோரைக் கட்டியணைத்து முத்தமிட்டு, ஒவ்வொரு போட்டியின்போதும் குழுவாகச் சேர்ந்து 'துஆ' (பிரார்த்தனை) செய்து, குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அதேவேளை ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர்களோ... வெற்றியின்போது பெண் தோழிகளையும் யாரென்றே தெரியாத அழகிகளையும் முத்தமிட்டு முகம் சுழிக்க வைத்தனர். ஐரோப்பியர்களிடம் நெருக்கமான குடும்பப் பிணைப்புகள் பெரும்பாலும் இல்லை. கூட்டுக் குடும்பம் எனும் கட்டமைப்பு, அவர்களிடையே முற்றாக மறைந்துவிட்டது. பெற்றோர், முதியோர் இல்லங்களில் விடப்படுகின்றனர். எல்லாவித அநாகரிகங்களையும் எவ்வித கூச்சமும் இன்றி செயல்படுத்துகின்றனர். அதேசமயம், மொராக்கோவின் வீரர்கள்தம் வெற்றிகளில், அவர்தம் குடும்ப ஆதரவு பெரும் பங்காற்றுகின்றது. ஐரோப்பியர்தாம் மொராக்கோ மக்களுக்கு கால்பந்தாட்டத்தைக் கற்றுக்கொடுத்தனர் எனச் சொல்லப் படுவதுண்டு. ஆனால், இப்போது அவர்களோ ஐரோப்பியர்களுக்கு இஸ்லாமிய நாகரிக நெறிமுறைகளையும் கூட்டுக்குடும்ப மதிப்பையும், அதே கால்பந்தாட்டம் மூலம் கற்றுத்தருகின்றனர். பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த அன்னையின் நெற்றியை முத்தமிடுவதைவிட வேறென்ன பரிசை அந்தத் தாய்க்கு நாம் கொடுத்துவிட முடியும்? தன் மகன் மைதானத்தில் இருந்து நேராக தன்னிடம் வந்து தன்னை நெற்றியில் முத்தமிடும்போது, அந்தத் தாயின் முகத்தில் தெரியும் பரவசத்தையும் பேரானந்தத்தையும் பூரணமாய் வர்ணிக்க வார்த்தை இல்லை. இஸ்லாம் ஒரு குடும்பப் பாங்கான மார்க்கம் எனச் சொல்வர். அது முற்றிலும் உண்மை. திருகுர்ஆனில் கூறப்படும் இறைதூதர்கள் வரலாறுகள் யாவும் குடும்பத்துடன்தான் கூறப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் குடும்ப உறவு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது என்பதே காரணம். பொருளாதாரமும் அறிவியலுமே எல்லாப் பிரச்சினையும் தீர்த்துவிடும் என எண்ணி, குடும்ப உறவைத் தூக்கி குப்பையில் போட்ட மேற்குலகின் விளைவுகளை உலகம் இன்று கண்கூடாக் காண்கின்றது. மேற்கத்திய வீரர்களும் ஒருநாள் தம் பெற்றோரின் நெற்றியை முத்தமிடும் காட்சியை கட்டாயம் நாம் காணத்தான் போகிறோம். எனினும்,வெறும் பிரார்த்தனைகளால் மட்டும் அது சாத்தியப்படாது. உண்மையான உழைப்பும் உள்ளார்ந்த உணர்வும் மெத்த வேண்டற் பாலது! ** கட்டுரை : முஹம்மது முஹ்யித்தீன் மதனீ, சவூதி அரசின் இஸ்லாமிய மேனாள் பிரதிநிதி (துபை), முகாம் : மதுரை

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!