கவிதை : அகிம்சைக்கு நேர்ந்த இம்சை!
* இவனது கைத்தடியின் முன்னால்
வெள்ளைக்காரனின்
பீரங்கிகளும் ஏவுகணைகளும்
பயனற்றுப் போயின....
ஆனால்
ஒரு கள்ளத்துப்பாக்கியின் முன்னால்
தோற்றுப் போனான்....
* இனி பொய் பேசுவதில்லை என்று
மெய் சொன்னவன் மேனியை
ஒரு பொய்
பொய்யாக்கிப் போட்டது...
* கறந்த பாலாய் இருந்தவனை
கள்ளிப்பால் கரித்துப் போட்டது...
* ஓர் அரையாடை பக்கிரியை
மூடி வந்த முழுஆடை
போட்டுத் தள்ளியது...
* இப்போதையக் கலகங்களுக்கெல்லாம்
அப்போதே விதை போடப்பட்டது...
* ஒரு பச்சைத்துரோகம்
கையில் பச்சைக்குத்தி
பச்சைப் படுகொலையை
பட்டப்பகலில் செய்தது...
* இந்து மத சத்தியம்
அப்போது முதலே
அசத்தியம் பூசி
இந்துத்துவம் ஆனது...
* வெள்ளையர் பாதுகாத்த
அஹிம்சையின் தர்மத்தைக்
கொள்ளையர் கொன்று
இம்சையாக்கினர்...
* நன்முறை இந்தியா
வன்முறையானது..
* காந்தியின் தேசம்
காந்தியைக் கொன்று
இரத்தக் கரை படிந்தது...
* எத்தனையோ முறை
எப்படி எப்படியோ கழுவியும்
நீங்காமல் அந்தக்கரை
சரித்திரத்தில் படிந்தது...
* இனி... இந்த தேசம்
சாந்தியின் தேசமாக
விடிவு காலம் எப்போது?
** - அத்தாவுல்லா

Comments
Post a Comment