இயல்பாய் பிறந்த கண்ணதாசன் கவிதை வரிகள்!
அது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சினிமா நடிகையாக இருந்த காலம்... பட்டிக்காடா பட்டணமா படத்தில் அவர் நாயகி. சிவாஜி கணேசன் நாயகன்...இவர் கிராமப்புறம். அவர் நாகரிக நகர்ப்புறம்... கிராமத்தின் சிறப்புகளை நாயகன், நாயகியிடம் சொல்வதாகக் காட்சி... டைரக்டர் அதை விளக்கிச் சொல்ல கண்ணதாசன் சொல்ல ஆரம்பித்தார்...
கேட்டுக் கோடி உருமி மேளம்...
அடுத்த வரி... சற்று யோசிக்கையில் பக்கம் இருந்த ஜெயலலிதா சொன்னார்...
போட்டுக்கோடி கோகோ தாளம் என்று போடலாமே... நல்லா இருக்குமே...
மறுக்காமல் ஆஹா என்ற ஒற்றை வார்த்தையில் உடன்பட்டார் கவியரசர்...
பாடல் வரிகள் வந்து விழ ஆரம்பித்தன...
கேட்டுக்கோடி உருமி மேளம்
போட்டுக்கோடி கோகோ தாளம்
பாத்துக்கோடி ஒன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் தாளம்...
ஜெயலலிதா சொன்ன ஒரு வரி பாடலுக்குப் பொருந்தி வருகிறது என்றவுடன் அலட்டிக் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டார் கண்ணதாசன்...பாடல் சூப்பர் ஹிட்... இது ஒரு சமயம்...
அப்புறம் அவர் வேறு ஒரு பாடலுக்கான மெட்டமைப்பில் இருந்தார்...
அது வசந்த மாளிகை படம்...யாருக்காக...
என்ற பாடல்...
வரிகள் இப்படி வந்து விழுந்தன...
"கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி...."
பாடல் வரிகளை சற்று நிறுத்தியவர் யோசித்தார்...
அப்போது அங்கே தேநீர் சப்ளை நடந்து கொண்டிருந்தது...
கவனித்துக் கொண்டிருந்த சாயா பையன் வாயிலிருந்து ஒரு வரி வெளி வந்தது...அவன் சொன்னான்...
'கடவுளை தண்டிக்க என்ன வழி...?'
"அட...! இதுவே நல்லாருக்கே....தம்பி நன்றி..."
கவிஞர் அந்த வரிகளையே கடைசி வரியாகச் சேர்த்துக் கொண்டார்...
கவிஞரின் உயரம் என்ன..அந்த சாயா பையனின் உயரம் என்ன...?
ஏணி வைத்தாலும் எட்டாது என்பீர்கள்...ஜெயலலிதாவாவது ஒரு நடிகை... நிறைய செய்திகள் அறிந்தவர்...
ஆனால், அவன், அந்த சாயாப்பையன்...அவன் வார்த்தைகளையும் ஏற்றுக் கொண்ட கவிஞரின் பெருந்தன்மையை என்ன சொல்வது...?
திருக்குறளில் ஒரு குறள் ...
"சால்பு எனப்படுவது யாதெனில் தோல்வி
தொலைவல்லார் கண்ணும் கொளல்..."
தனக்கு நிகர் இல்லாதவரிடம் கூட தோல்வியை ஒப்புக் கொள்வது என்பார் வள்ளுவர்.
இது தோல்வியில்லை என்றாலும் சமமில்லாத அந்த பையன் வார்த்தையை அங்கீகாரம் செய்த கவியரசர் பெருந்தன்மையைக் குறிக்கிறது....அதற்கு அவரது அறிவுடன் பக்குவமும் பரந்து பட்ட விரிவான அறிவும் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் போக்கும் காரணமாக இருந்திருக்கலாம்...
மேலானவர்கள் பெருந்தன்மையும் மேன்மைகளும் தனிதான்!
********
- அத்தாவுல்லா

Comments
Post a Comment