கவிதை: மானுட சேவையும் மத துவேசமும்!
* ஒரு வெண்ணிற தேவதையின்
ஆயுட்கால தவத்தை
ஒரு சுடுகாட்டுக் காக்கைக்
கொத்திப் போட்டிருக்கிறது...
* அப்பழுக்கில்லாத
அந்த தேவதையின்
மானுடச் சேவையை
மத துவேஷத்தால்
மறுதலிக்கிறான்
ஒரு மவுட்டீகன்...
* மனிதத்துவம் மிகுந்த
அந்த பரோபகாரத்தின் மீது
மதச் சாயம் பூசுகிறான்
இந்த ராட்சசன்...
* புழுவேறித் துளைத்த
குஷ்ட விரல்களின்
கொப்புளங்களையும்
தன் ஈர இதழ்களால்
ஒத்தி எடுத்து
உபகாரம் செய்த
பரிகாரத்தை
அபச்சாரம் என்கிறான்
இதயம் அழுக்கானவன்...
* அவரது
மரிக்கொழுந்து மனதை
ஈட்டி கொண்டு
சிதைக்கிறான் ஈனன்...
* அன்னையின் தன்னலமற்ற
சேவைப்
பாலினை
விஷம் என்று
அலறுகிறான்...
* கங்கைப் பிணந்தின்னிக் கழுகு
தன் கரும்மாந்திர வினைக்காய்
பறந்து சென்ற ஒரு
பச்சைப் புறாவின் மேல்
எச்சம் கழிக்கிறது...
* ஏசு பெருமான் தொட்டால்
நோயாளிகளுக்கு சுகமாம்...
எந்த விரல் கொண்டு
தீண்டச் சுகமாகும்
இவன் நோய்...?
* 'கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்கும்'
என்றார் ஏசு பெருமான்....
அன்னை தெரசா ...
இந்திய மக்கள் -
கேளாமலே கிடைத்த வரம்
ஏழையர் கைகள் -
தட்டாமலே திறந்த கதவு -
ஆதரவற்றோர்
தேடாமலே கிடைத்த செல்வம்....!
** - அத்தாவுல்லா
( அன்னை தெரசாவின் தன்னலமற்ற சேவையை மதப்பிரசாரம் என்று பாசிசவாதிகள் பழி சுமத்தியபோது எழுதிய கவிதை! )

Comments
Post a Comment