ஆளுநர் ரவி திரும்பப் பெறப்பட வேண்டும்! - ஆம் ஆத்மீ வசீகரன்

சென்னை: தமிழ்நாடு ஆம் ஆத்மீ தலைவர் வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு முழுமையான தடை ஏற்பட வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும். காரணம் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் என பல தரப்பினரின் வாழ்வானது சீரழிகிறது. குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்ட பலர் உயிரை மாய்த்துக்கொண்டனர் என்பது அறிந்ததே. இணைய வழியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடுவதால் பணத்தை இழந்து, மனம் நொந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டதால் பல குடும்பங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலை தொடரக்கூடாது என்றால் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முழுமையான தடை தேவை. ஆன்லைன் சூதாட்டங்களை வரம்பிற்குள் கொண்டுவர மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் இம்மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காதது கடும் கண்டனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இப்பொழுது தமிழக சட்டப்பேரவையில் 2 வது முறையாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதாவானது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்து, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழகத்தில் இனி இடம் கிடையாது என்ற நிலை ஏற்பட வேண்டும். எனவே தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் வரவேற்கிறேன். இந்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கி ஆன்லைன் சூதாட்டத்துக்கு முழுமையான தடை ஏற்பட தமிழக அரசிற்கு ஆளுநர் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இல்லையேல் ஆளுநர் ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கே எதிராக இருக்கிறார் என்பதே பொருள். தமிழக மக்கள் வாழ்வை சீரழிக்கக் கூடிய சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும். இல்லையேல் தமிழ்நாட்டு மக்கள் வரிப் பணத்தில் வாழும் ஆளுநர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு வசீகரன் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!