12 மணி நேர வேலை திருத்த சட்டம்: ஆம் ஆத்மீ வசீகரன் கண்டனம்!
சென்னை:
8 மணி நேர வேலை நேரத்தை
12 மணி நேரம் ஆக்கும்
தொழிலாளர் விரோத சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று
ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருக்கிறது.
இது திமுக இத்தனை ஆண்டுக் காலமாகக் கடைபிடித்து வரும் தொழிலாளர் நலன் சார்ந்த கொள்கைளுக்கே எதிராக உள்ளது.
மேலும் மே தினம் என்பதே தொழிலாளர்களின் வேலைநேரம் எட்டு மணி நேரம் வேலை என்பதை உறுதிப்படுத்திய நாள்.
தொழிலாளர்களின் இரத்தத்தில் அவர்களின் போராட்டதால் விளைந்த அடையாளம் தான் 8 மணிநேர வேலை.
8 மணிநேர வேலை உரிமையைப் பறிக்கும் வகையில்,
12 மணி நேரமாக உயர்த்துவது உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான நடவடிக்கையே ஆகும்.
இது சர்வாதிகார - முதலாளித்துவ வர்க்கத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
மேலும் இச்சட்டத்தால் தொழிலாளர் சமூகம் கூடுதலான உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.
எனவே, இதனை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசை தமிழக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள இந்த சட்டம், 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் பிரிவு 51, 52, 54, 55, 56 மற்றும் 59 ஆகியவற்றின் வகைமுறைகள் அல்லது அதன்கீழ் செய்யப்பட்ட விதிகள் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்கிறது.
இதன்மூலம் வேலை நேரத்தைத் தொழிலகங்கள் விரும்புகிறபடி மாற்றி அமைத்துக்கொள்ள இது அதிகாரமளிக்கிறது. இதனால் தற்போதுள்ள 8 மணி நேர வேலை என்பது 12 மணி நேரமாக உயரும் ஆபத்து உள்ளதாக தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.
தமிழ்நாட்டில் தான் 1923 இல் சிங்காரவேலரின் முயற்சியால் மே நாள் கொண்டாடப்பட்டது. அதன் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த நேரத்தில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தி இருப்பது கண்டிக்கத்தக்கது
பாஜகவே நடைமுறைப்படுத்தத் தயங்கிவரும் இந்த சட்டத்தை எதற்காக தி மு க அரசு நிறைவேற்றியது ஏன்?
தமிழக தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கிற தொழிலாளர் விரோத சட்டமான இந்த திருத்தச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Comments
Post a Comment