பிரபல யூனானி மருத்துவர் பத்மஸ்ரீ சையத் கலீபத்துல்லா மறைவு!
யூனானி மருத்துவ மேதை ஹக்கீம் சையது கலீஃபத்துல்லா ( வயது 85 ) 06-06-2023 அன்று காலமானார்.
அவரது உடல் சென்னை இராயப்பேட்டை ஜானிஜான்கான் சாலையில் உள்ள* எஸ்.கே யுனானி மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள்
நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 1938-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பிறந்த இவர், பாரம்பரிய முறையில் யுனானி கல்வி பயின்று சென்னையில் யூனானி மருத்துவப் பயிற்சியைத் தொடங்கினார். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கடந்த 60 ஆண்களுக்கும் மேலாக மருத்துவராக, நண்பராக, தன்னலமற்ற சமூக ஆர்வலராக சேவை ஆற்றி முத்திரை பதித்தவர். கடந்த 1985 ஆம் ஆண்டில், யுனானி மருத்துவ முறையை ஊக்குவிப்பதற்காக புகழ்பெற்ற யுனானி மருத்துவர் ஹக்கீம் சையத் நியாமத்துல்லா நினைவாக நியாமத் சயின்ஸ் அகாடமி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை அவர் நிறுவினார்.
சையத் கலிஃபத்துல்லா, யுனானி மருத்துவம் குறித்து பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், சிகிச்சைக்கான கிழக்கு மற்றும் மேற்கத்திய அணுகுமுறைகள் பற்றிய சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டு ஆற்றிய உரைகள் இளம் மருத்துவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. கடந்த 1985 இல் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடத்தப்பட்ட , சுகாதாரம் மற்றும் நோய்களுக்கான கூறுகள் பற்றிய இரண்டாவது சர்வதேச மாநாடு உள்ளிட்ட பல மாநாடுகளில் அவர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
ஹக்கீம் கலீஃபத்துல்லா கடந்த 1987-ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை இந்தியக் குடியரசுத் தலைவரின் கெளரவ மருத்துவராக இருந்தார். தில்லியில் உள்ள யுனானி மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் ஆளும் குழுவின் உறுப்பினராகவும், அதன் மருத்துவ ஆராய்ச்சி துணைக் குழுவின் தலைவராகவும்அவர் பணியாற்றியுள்ளார். இந்திய அரசின் ஆயுர்வேத, சித்தா மற்றும் யுனானி மருந்துகளின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் மேலும் பல பதவிகளை வகித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைழக்கத்தில் யூனானி மருத்துவ படிப்புகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட மிகப்பெரிய பங்களிப்பை ஹாக்கீம் சாஹிப் வழங்கியுள்ளார். இதற்காக கடந்த 1998ஆம் ஆண்டு அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி பல்கலைக்கழகம் கவுரவித்தது. இதேபோன்று ஹக்கீம் மில்லத், உள்ளிட்ட பல விருதுகள் அவரின் சேவைக்காக மகுடம் சூட்டப்பட்டன.
அரசு யுனானி மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர், இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலின் தலைவர், இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலின் யூனானி குழுவின் துணைத் தலைவர், பெங்களூரு தேசிய யூனானி மருத்துவ நிறுவனத்தில் குழு உறுப்பினர், யூனானி மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் நிர்வாக குழு தலைவர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல கவுன்சில் உறுப்பினர், இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் யூனானி மருத்துவக் குழுவின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்று ஹக்கீம் சாஹிப் ஆற்றிய பணிகள் ஏராளம்.

Comments
Post a Comment