Posts

Showing posts from June, 2022

அவதூறு செய்தவர் படுகொலை: தீவிரவாதிகளுக்கு தொடர்பு இல்லை!

இறைத்தூதர் என்று உலக மக்களால் போற்றப்படும் நபிகள் நாயகம் ( ஸல் ) பற்றி அவதூறு கூறிய நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட கண்ணையா லால் என்பவரை இருவர் தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இல்லை என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த கொலைக்கு முஸ்லிம் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சமய நல்லிணக்கத்திற்கு எதிராக சில மதவாத அமைப்புகள், தனி நபர்கள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

சிவசேனா ஆட்சி கவிழ்ந்தது!

மும்பை: சிவசேனாவின் அதிருப்தி எம். எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, வேறு மாநிலத்தில் கடத்திவைத்து இப்போது மகாராஷ்டிராவில் பிஜேபி ஆதரவு ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும் பிஜேபியின் பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். இது ஜனநாயக விரோத செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. முன்னதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் பதவி விலகியதை அடுத்து, இருவரும் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்கள்.

ஆஸ்கர் விருது குழுவில் நடிகர் சூர்யா!

பன்னாட்டு விருதான ஆஸ்கர் விருது குழு உறுப்பினராக நடிகர் சூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆஸ்கர் தேர்வுக்குழுவில் புதிதாக நடிகர்கள், இயக்குநர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இதில் தென்னிந்திய அளவில் தமிழ் திரையுலக நட்சத்திரமான சூர்யா தேர்வானதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திராவிட முன்மாதிரி ஆட்சி பொற்கால ஆட்சியாகும்! -முதல்வர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கினார். அவர் உரையாற்றுகையில், திமுகவின் திராவிட முன்மாதிரி ஆட்சி மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக பொற்கால ஆட்சியாக அமையும் என்று குறிப்பிட்டார்!

அமீரகம் சென்று திரும்பினார் பிரதமர் மோடி!

அபுதாபி: ஜெர்மனியில் ஜி-7 மாநாட்டில் கலந்துகொண்ட மோடி, பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அபுதாபி விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அமீரக அதிபர் ஷேக் முஹம்மது பின் சையது நஹ்யானை சந்தித்து முன்னாள் அதிபர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். இந்தியாவில் பிஜேபி நிர்வாகிகள் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் குறித்து அவதூறு கருத்து கூறியதால், அரபு நாடுகள் உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தின. இதற்கு பதிலாக, அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். அவதூறு கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய வெளியுறவு துறை விளக்கம் தெரிவித்தது. இப்போது அமீரகம் சென்ற பிரதமர் மோடியிடம் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல், நபிகள் நாயகம் பற்றிய அவதூறு போன்றவை இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

முடிவுகள் அறிவிக்காத அதிமுக நிர்வாகிகள் கூட்டம்!

சென்னை: அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தலைமை நிலையத்தில் நடைபெற்றது. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி. முனுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்ந்தெடுப்பது குறித்த முடிவை இன்று அறிவிக்கவில்லை. பழனிசாமி தரப்பு சுறுசுறுப்பாக செயல்படுவதால், மதுரையில் மாஸ் காட்டிய ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சென்னை புறப்பட்டு வருகிறார்.

செய்தித் துளிகள்!

* திருவனந்தபுரம்: கேரளாவில் 70 வயது முதிய பெண் ஆரிபா நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு கைகளைக் கட்டியபடி நீந்தி சாதனை படைத்துள்ளார்! * ****இராமநாதபுரம்: புல்லங்குடி கிராமம் முனியராஜ் மகன் ராகுல்கவி ( வயது 16 ) நாணயம் சேகரிப்பு, அஞ்சல்தலை சேகரிப்பு, நூல்கள் சேகரிப்பு ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அஞ்சல் அடடையில் 117 திருக்குறள் எழுதி சாதனை படைத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதி!

மும்பை: மகாராஷ்டிராவின் அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாம் மாநிலத்தில் தங்கியுள்ளனர். இதனால் ஆளும் கட்சி ஆட்டம் கண்டுள்ளது. சிவசேனா தலைவர் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் சமாதான முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதன் பின்னணியில் பிஜேபி செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை உடைக்க அதிருப்தி எம். எல். ஏ. க்கள் மூலம் சதி செய்வதாக கூறப்படுகிறது. இதனால் சிவசேனா - பிஜேபி மோதல் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் மீது சிவசேனா தொண்டர்கள் தாக்குதல் தொடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பறவை மோதி யோகியின் ஹெலிகாப்டர் விபத்து!

உ. பி.முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாரணாசி சென்றபோது அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் விபத்துக்குள்ளனது. எனவே தடுமாறிய ஹெலிகாப்டரை பத்திரமாக தரையிறக்கி, யோகியை கீழே இறக்கிவிட்டுள்ளனர். சிறிய விபத்து என்பதால் யோகி உயிர்தப்பினார்!

வங்காளதேசத்தில் மிக நீளமான பாலம் திறப்பு!

வங்காளதேசத்தில் 6.15 கி.மீ. நீளத்தில் பத்மா நதி மீது 3.6 மில்லியன் டாலர் செலவில் ரயில் - சாலை மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்துவைத்த பிரதமர் ஷேக் ஹசீனா பேசுகையில், இந்தப் பாலம் நமது நாட்டின் பெருமை. நமது நாட்டின் அடையாளம் என்று பெருமிதம் தெரிவித்தார். சொந்த நாட்டின் நிதியில் கட்டப்பட்ட கனவுத் திட்டம் என்றும் கூறினார். தென்மேற்கு வங்காளத்தை தலைநகர் தாகா மற்றும் பிற பகுதிகளை இந்தப் பாலம் இணைக்கிறது.

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்!

சென்னை: எடப்பாடி பழனிசாமி தரப்பு சார்பில் முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் கூறியதாவது: பொதுக்குழுவில் அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதில் விதிமீறல் இல்லை. கட்சியில் ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இனி இல்லை. இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளராகவும் ஓ. பன்னீர் செல்வம் பொருளாளராகவும் உள்ளனர் என்றார்.

குஜராத் கலவரம் : புதிய தீர்ப்பு!

குஜராத் கலவரத்தில் நூற்றுக் கணக்கில் சிறுபான்மை முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதில் அப்போது முதலமைச்சராக இருந்த மோடி மற்றும் 53 பேர் தான் குற்றவாளிகள் என்று முன்னாள் எம். பி. ஜாப்ரியின் மனைவி ஜகியா தொடுத்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில் மோடி அந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டது சரிதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஒரு மாநிலத்தில் நடைபெறும் கலவரத்துக்கு அம்மாநில முதல்வர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். கலவரம் நடப்பதை நிறுத்தி உயிர்ப் பலிகளைத் தடுக்க வேண்டும். ஆனால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாக மோடி காரணமாக இருந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. உதாரணமாக முன்னாள் எம். பி. ஜாப்ரி, கொலைகாரக் கும்பல் தன் வீட்டைச் சூழ்ந்தபோது, போலீஸ் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் மோடிக்கும் போன் செய்தார். ஆனால் எந்தப் பாதுகாப்பும் கிடைக்கவில்லை. அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அதிமுக செயற்குழுவில் அநாகரிகம்!

அதிமுக செயற்குழு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு கூட்டமாக நடைபெற்றது. பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் பங்கேற்ற ஓ. பன்னீர் செல்வம் அவமதிப்பு செய்யப்பட்டார்! பேசாதே என்று அநாகரிகமாக கூச்சல் போட்டனர். இதனால் அவர் வெளியேறினார். அவர் மீது காகிதம், தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது! இது அரசியலில் மோசமான நடத்தை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

பிரதமர் மோடி ஜெர்மனி- யூ. ஏ. இ. சுற்றுப்பயணம்!

புதுடெல்லி: பிரதமர் மோடி ஜெர்மனி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். ஜி-7 அமைப்பின் உச்சி மாநாடு ஜெர்மனியில் ஜூன் 26 முதல் 28 வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசுகிறார். இதன் பிறகு 28ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். இந்தியாவில் நபிகள் நாயகம் ( ஸல் ) பற்றி பிஜேபி செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் சிலர் அவதூறு பேசியது குறித்து அமீரகம் மற்றும் அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி செல்வது குறிப்பிடத்தக்கது.

திரவுபதி முர்மு - கோயிலை கூட்டும் ஜனாதிபதி வேட்பாளர்!

ஆளுங்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு என்பவர் அறிவிக்கப்பட்டவுடன்- அவர் நேராக ஒரு கோயிலுக்கு சென்று துடைப்பத்தால் சுத்தம் செய்தார். அதனை வீடியோ பிடித்து ஒளிபரப்பி விளம்பரம் செய்கிறார்கள். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் நடந்தும் இந்த பெண் தலைவர் எதற்கும் குரல் கொடுக்கவில்லை. இதனால் தான் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, குடியரசு தலைவர் பதவிக்கு ரப்பர் ஸ்டாம்ப் தேவை இல்லை என்று கூறியுள்ளார்!

அதிமுக பொதுக்குழு : உயர் நீதிமன்றம் அனுமதி!

அதிமுக பொதுக்குழு நடத்தவும் கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரவும் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரே தலைமை கோஷம் அதிமுகவில் எழுந்துள்ளதால், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பொதுக்குழுவை இன்று கூட்டியுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் நீதிமன்றம் சென்றது குறிப்பிடத்தக்கது.

மேகதாது அணை : சுற்றுச் சூழல் மனு தள்ளுபடி!

புதுடெல்லி: கர்நாடக அரசின் மேகதாது அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் துறை தெரிவித்துள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

நாடு பற்றி எரியும்போது யோகா கொண்டாட்டம்!

யோகா என்பது ஒரு உடற்பயிற்சி தான். ஒன்றிய பிஜேபி அரசு அதற்கு மதச் சாயம் பூசியதோடு - தேவையற்ற ஆடம்பர முக்கியத்துவம் கொடுத்துள்ளது. யோகா நாளும் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் அக்னிபாத் உட்பட பல பிரச்சினைகள் பற்றி எரியும்போது, அதைப் பற்றிக் கவலைப்படாமல், பிரதமர் மோடி உலக யோகா நாளைக் கொண்டாடிக்கொண்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்!

ஆர்டர்லி வைத்திருக்கும் காவல் அதிகாரிகள் மீது வழக்கு?

சென்னை: வீட்டு வேலைக்கு காவலர்களை ஏவலர்களாக - ஆடர்லியாக உயர் அதிகாரிகள் பயன்படுத்தினால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல் வாகன கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யஸ்வந்த் சின்ஹா - எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்!

புதுடெல்லி: எதிர்க் கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளராக திரினாமுல் காங்கிரஸ் துணை தலைவர் யஸ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதற்கு வசதியாக கட்சி பொறுப்பிலிருந்து விலகினார். தன்னை தேர்ந்தெடுத்த கட்சி தலைவர் மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்! - கே. பி. முனுசாமி

சென்னை: அதிமுக பொதுக்குழு 23ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி. முனுசாமி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் நிச்சயம் கலந்து கொள்வார் என்று அவர் தெரிவித்தார். ஆனால் பொதுக்குழுவை தள்ளிப் போட வேண்டும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஓ. பி. எஸ். கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கோரிக்கை மனுவை நீதிமன்றத்திலும் சமர்ப்பித்துள்ளார். இதனால் அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது.

அதிமுகவில் ஒரே தலைமை கோஷம்!

சென்னை: அதிமுகவில் ஒரே தலைமை கோஷம் தலையெடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி தலைமை அலுவலகத்தில், சனிக்கிழமை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் கட்சியின் தீர்மானக் குழு கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் - துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை மாற்ற முடியாது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்துக்கு வந்த துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

அக்கினிப் பாதை திட்டம் தேவை இல்லை! -பிரியங்கா காந்தி

புதுடெல்லி: அக்கினிப் பாதை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். தேர்வு முடிவுகளை வெளியிட்டு விமானப் படைக்கான நிறுத்தப்பட்ட நியமனப் பணிகளை தொடங்குங்கள். ராணுவ ஆள் சேர்ப்பை முன்பு போல் தொடருங்கள் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த திட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பீகார், உ. பி. முதலான மாநிலங்களில் ரயில்கள் - வாகனங்கள் எரிக்கப்படுகின்றன. நாடு முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. சென்னையில் இன்று போர் நினைவுச் சின்னம் அருகே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாங்கள் ராணுவ தேர்வு எழுதிப் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறோம். இந்த புது அறிவிப்பினால் ராணுவத்தில் சேரும் எங்கள் கனவு கேள்விக்குறி ஆக்கியுள்ளது என்று தெரிவித்தனர். ( 18 - 6 - 2022 )

அக்கினிப் பாதை என்றால் என்ன?

அக்கினிப் பாதை என்பது ஒன்றிய பிஜேபி அரசு அறிவித்துள்ள இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் புதிய திட்டம் ஆகும். இதில் தொகுப்பு ஊதியத்தில் 4 ஆண்டுகள் பணி வழங்கப்படும். அதன் பின் 25% பேர் நிரந்தரம் செய்யப்படுவர். மீதிப்பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவர். அக்கினிவீரர் என சான்றிதழ் வழங்கப்படும். அவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. இதனால் ராணுவ வீரர்கள் கூலித் தொழிலாளிகள் போல் நடத்தப்படுவதாகவும் பலருக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் இளைஞர்கள் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது!

உச்சநீதிமன்ற நீதிபதி ஷாவுக்கு இதய சிகிச்சை!

புதுடெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதி எம். ஆர். ஷாவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்தது. இமாச்சலப்பிரதேசத்தில் அவர் ஓய்வு எடுத்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து டெல்லி வந்து தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்தது. மூன்று நாட்களில் நீதிபதி வீடு திரும்புவார் என தகவல்!

ஒரே தலைமை என்பது தேவை இல்லை! - ஓ. பி. எஸ்.

துணை முதல்வர் பதவி அதிகாரமற்ற பதவி என்று முன்னாள் முதல்வர் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரே தலைமை என்பது தேவையற்ற ஒன்று. இது முன்னாள் முதல்வர் - பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்றும் கூறியுள்ளார்.

விதிகளை மீறி வீடுகளை இடிக்க உச்சநீதிமன்றம் தடை!

புதுடெல்லி: உ. பி.யில் சட்டத்துக்குப் புறம்பாக - விதிகளை மீறி வீடுகளை இடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. விளக்கம் கேட்டு முதலமைச்சர் யோகி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் குறித்து அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய முஸ்லிம்களின் வீடுகளை இடிக்க அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஒரு பெண் சமூக ஆர்வலர் வீடு உட்பட பல வீடுகள் இடிக்கப்பட்டதற்கு இந்தியாவிலும் உலக அளவிலும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில் இஸ்லாமிய அமைப்பு தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உ. பி. யில் மனித உரிமை மீறல்: உச்ச நீதிமன்றத்திற்கு முன்னாள் நீதிபதிகள் கோரிக்கை!

உ. பி. யில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது பிஜேபியின் யோகி ஆதித்யநாத் அரசு வன்முறையை ஏவி அடக்கி ஒடுக்கும் போக்கை முன்னாள் நீதிபதிகள் கண்டித்து, இதனை உச்சநீதிமன்றம் தானே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அங்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி சிறுபான்மை முஸ்லிம்களின் வீடுகளை இடிப்பது போன்ற அடிப்படை மனித உரிமை மீறல்களை நிகழ்த்துவது குறித்து 12 முன்னாள் உச்சநீதிமன்ற - உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று ஆஜர் ஆனார். நாட்டின் மிகப் பெரும் கட்சியான காங்கிரஸ் தலைவர்களையே மிரட்டும் வகையில் ஒன்றிய பிஜேபி அரசு, பல்வேறு பொய் வழக்குகள் - விசாரணை அமைப்புகள், ஒன்றிய அரசின் துறைகள் ஏவி விடப்படுவதைக் கண்டித்து பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

யோகி பதவி விலக கோரிக்கை!

முஹம்மது நபி ( ஸல் ) பற்றி இழிவாகப் பேசிய பிஜேபி செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா உள்ளிட்டவர்களை கைது செய்து தண்டனை வழங்க கோரி உ. பி. அலஹாபாத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய முஸ்லிம்களின் மீது தேச விரோத சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவர்களின் வீடுகளை இடிக்க உத்தரவிட்ட உ. பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தியா சர்வாதிகார நாடு இல்லை என்றும் ஜனநாயக போராட்டம் நடத்திய சிறுபான்மையினர் மீது அடக்குமுறையை ஏவி விடும் யோகி போன்றவர்கள் முதலமைச்சர் போன்ற உயர் பதவி வகிக்க தகுதி இல்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அரசு பள்ளிகள் நாளை திறப்பு!

அரசு பள்ளிகள் - அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை ( திங்கள் ) திறக்கப்படுகிறது. ஆசிரியர்கள் - மாணவர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார்கள்.

அமெரிக்க அமைச்சர் கண்டனம்!

இந்தியாவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களைக் கண்டித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அமெரிக்காவின் மக்கள்தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே இந்துக்கள் வசிக்கிறார்கள். அதிகமான கோயில்களும் இங்கு உள்ளன. ஆனால் அவர்களுக்கு எதிராக எந்த பாகுபாடும் தாக்குதலும் நடைபெறவில்லை. ஆனால் பிஜேபி ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக, 10 மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது போன்ற மதப் பாகுபாடு நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அந்தப் போக்கை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

அவதூறு கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!

நபிகள் நாயகம் ( ஸல் ) பற்றி இழிவாகப் பேசிய பிஜேபி செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா, ஐடி பிரிவு நவீன் ஜிண்டால் இருவரையும் கைது செய்து, தண்டனை வழங்க வலியுறுத்தி இந்தியாவில் பல மாநிலங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மே.வங்காளம், உ.பி., டெல்லி, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உ.பி அலஹாபாத் நகரில் போலீஸ் தடியடியை எதிர்த்து கல்வீச்சு நடத்தப்பட்டது. டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதில் தொழுகை முடித்து வெளியே வந்த முஸ்லிம்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நயன்தாரா திருமணம்!

வாழ்க்கையில் பல காதல் - திருமண ஏமாற்றம் போன்ற நிகழ்வுகளை சந்தித்த பிரபல நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் காதல் திருமணம் இன்று மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு வந்தவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று கெடுபிடி செய்யப்பட்டனர். ஊடகத் துறையினர் பல கெடுபிடிகளுக்கு ஆளாயினர். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த திருமணத்தில் அரசியல் - திரையுலக பிரபலங்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்தினர்!

எதற்கு சோதனைகள்?

ராணுவம் நாட்டைக் காக்க... போலீஸ் மாநில மக்களைக் காக்க... சி. பி. ஐ. சிறப்பு வழக்குகளை விசாரிக்க... ஐ. என். ஏ. என்பது யாருக்காக? அப்பாவி சிறுபான்மை மக்கள் - குறிப்பாக முஸ்லிம்களை குறி வைத்து விசாரணை செய்வதும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவதும் மனித உரிமை மீறல் ஆகும். இந்தியா குறித்து வெளிநாடுகளில் - குறிப்பாக அரபு நாடுகளில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் - வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாய நிலையில் - தமிழகத்தில் சில முஸ்லிம்களின் வீடுகளில் ஐ. என். ஏ. சோதனை செய்துள்ளது ஒன்றிய பிஜேபி அரசு திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது. இதுகுறித்து தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம. ம. க., வி. சி. க. ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். திமுக திராவிட முன்மாதிரி ஆட்சி சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் நல பணியாளர் பணி நியமனம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

கிராமங்களில் பணியாற்றிய 18 ஆயிரத்து 500 மக்கள் நலப்பணியாளர்கள் 2011ல் ஜெயலலிதா ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க, திமுக அளித்த வாக்குறுதிப்படி முதல்வர் மு. க. ஸ்டாலின் இப்போது ஏற்பாடு செய்து வருகிறார். கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பணியில் ரூ.7500 சம்பளத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இந்த புதிய திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், மக்கள் நல பணியாளர்கள் விரும்பினால், அரசின் புதிய கொள்கையை ஏற்று பணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். விரும்பாதவர்கள் கோரிக்கைகளை முன் வைத்து தனியாக நீதிமன்றத்தை அணுகலாம் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

நபிகள் நாயகம் பற்றி பிஜேபி அவதூறு : உலக நாடுகள் கண்டனம்!

நபிகள் நாயகம் முஹம்மது ( ஸல் ) பற்றி பிஜேபி செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா, தொலைக்காட்சியில் இழிவுப்படுத்தி பேசியது குறித்து உலக அளவில் கண்டனம் எழுந்துள்ளது. நவீன் குமார் என்பவர் அதனைப் பாராட்டி டுவீட் செய்துள்ளார். இதனை கண்டித்து உ. பி. யில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியபோது, கலவரம் ஏற்படுத்தப்பட்டது. போராட்டம் நடத்தியோர் வீடுகளை இடிப்போம் என்று உ. பி. அரசு மிரட்டியுள்ளது. நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய நபர்கள் குறித்து முதலில் ஏமன் கண்டனம் தெரிவித்துள்ளது. பின்னர் கத்தர், குவைத் நாடுகள் இந்திய தூதர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பின. அரபு ஒத்துழைப்பு நாடுகள், பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகளும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. பிஜேபி அரசின் மதவாதப் போக்கினால் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுட்டுள்ளது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. மதத் தலைவர்களை இழிவாகப் பேசுவதை பிஜேபி அனுமதிக்காது என்றும் இந்தியாவில் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம் என்றும் பிஜேபி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அ...

கவிதை : காகிதக் கப்பல்!

தண்ணீரில் மிதக்கிறது நீந்துகிறது எனது கனவுக்கப்பல் நீரோடை வேகத்தில் என் கண்ணிலிருந்து மறைந்தே விட்டது... என் செய்வேன்? - மீராப்பிரியன்

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி!

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை நோக்கி எஸ். டி. பி. ஐ. கட்சி சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது! தமிழக மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்படுவதைக் கண்டித்து இந்த பேரணி நடைபெற்றது.

காஷ்மீரில் துன்பம் அனுபவிப்பது யார்?

காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கிறார்களா? அங்கே முன்னாள் முதலமைச்சர்களை சிறையில் தள்ளி - மாநில அந்தஸ்தை நீக்கி ராணுவ ஆட்சி நடத்தி வருகிறது ஒன்றிய பிஜேபி அரசு! இந்த லட்சணத்தில் அங்கே பண்டிட்கள் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு வருவதாக தினம் செய்தி வெளியிட்டு வருகிறது. இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்வதாக பம்மாத்து செய்தி வெளியிடுகின்றன விலை போன ஊடகங்கள்! உண்மையை எப்போது சொல்லப்போகிறார்கள் என அம்மாநில குடிமக்கள் கேட்கிறார்கள்!

ரயிலில் அதிக லக்கேஜ் ஏற்றினால் அபராதம்!

ரயிலில் அதிக லக்கேஜ் ஏற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ரயில் துறையை தனியாருக்கு விற்று வருவதால் பயணிகளுக்கு பல சலுகைகள் ரத்து செய்யப்பட்டுவருகிறது. டிக்கட் விலை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிக லக்கேஜ் ஏற்றும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரூர் தாசுக்கு கலைஞர் விருது!

முதல்வர் மு. க. ஸ்டாலின் பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர் தாசுக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதும் ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோள் விருதும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கினார்! Updated on 3-6-2022